Home » » அணு ஏவுகணை சோதனையில் பாகிஸ்தான் வெற்றி

இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் அணு ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை, 1,000 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கக்கூடியது ஆகும்.
இந்தியா, கடந்த 19-ந் தேதி, அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது. அது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். 5 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கியது.
இந்நிலையில், இந்தியாவுக்கு போட்டியாக, பாகிஸ்தானும் நேற்று அணு ஏவுகணை சோதனை நடத்தியது. அந்த ஏவுகணைக்கு 'ஹப்த்-4' என்று பெயர். 'ஷஹீன்-1ஏ' என்றும் அழைக்கப்படுகிறது. இது, நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.
பாகிஸ்தான் ஏற்கனவே 'ஷஹீன்-1' என்ற ஏவுகணையை சோதித்துப் பார்த்துள்ளது. அதன் தொழில்நுட்பம் மற்றும் பாயும் தூரத்தில் மாற்றங்கள் செய்து இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, முந்தைய ஏவுகணையின் முன்னேறிய வடிவமாக இது பார்க்கப்படுகிறது.
இந்த ஏவுகணை சோதனை, கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது. அதன்மூலம், ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக பாகிஸ்தான் ராணுவம், அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஆனால், அது எவ்வளவு தூரம் பாயக்கூடியது என்ற விவரத்தை வெளியிடவில்லை.
முந்தைய ஏவுகணை, 750 கி.மீ. தூரம் பாய்ந்து செல்லக்கூடியது. தற்போது, இந்த ஏவுகணை 1,000 கி.மீ. தூரம் வரை பாயக்கூடிய வகையில், தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏவுகணையில், அணு ஆயுதங்களை பொருத்தி, இலக்குகளை துல்லியமாக தாக்கலாம். வழக்கமான ஆயுதங்களையும் பொருத்த முடியும். இந்தியாவில் உள்ள சில குறிப்பிட்ட நகரங்களை இந்த ஏவுகணை தாக்கவல்லது என்று பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவித்தன.
சோதனை வெற்றிகரமாக அமைந்ததற்காக, பாகிஸ்தான் விஞ்ஞானிகளுக்கும், ராணுவத்துக்கும் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் கிலானி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை பற்றி இந்தியாவிடம் பாகிஸ்தான் முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருந்தது. ஏவுகணை செல்லும் பாதையில் பறக்கும் இந்திய விமானங்களை உஷார்படுத்தும்படி கேட்டுக்கொண்டது.

0 comments to "அணு ஏவுகணை சோதனையில் பாகிஸ்தான் வெற்றி"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer