சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவ தும் அவை தொடர்பாக எவரும் கைது செய்யப்படாமையும் இந்த நாட்டில் ஊடக சுதந்திரத்தைக் கொலை செய்யும் நடவடிக்கைகளாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற தகவல் ஊடகத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே சரவணபவன் எம்.பி. இவ்வாறு கூறினார்.
அவரது உரை வருமாறு:
இன ஒடுக்குமுறைக்கு எதிராக உறுதியான போராட்டத்தை நடத்தி 27 வருடங்கள் கொடிய சிறைவாசம் அனுபவித்த போதிலும் கூட தனது இலட்சிய உறுதியில் தளராது நின்று கறுப்பின மக்களை விடுவித்த மாமனிதர் நெல்சன் மண்டேலாவுக்கு இனவாத அநீதி களுக்கு எதிராகப் போராடும் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எனது மனப்பூர்வ மான அஞ்சலியைச் செலுத்தி எனது உரையை இங்கு நான் ஆரம்பிக்கின்றேன்.
மாமனிதர் நெல்சன் மண்டேலா இன ஒடுக்குதல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடிய அதே வேளையில் கருத்துச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் என்பவற்றை அடைவதிலும் தன் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
குறிப்பாக நீதிமன்றத்தைக் கூட ஓர் ஊடகமாக்கி மக்களை எழுச்சிபெற வைக்கமுடியும் என்பதற்கு, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட போது அவர் ஆற்றிய நீதிமன்ற உரை சாட்சியம் சொல்லி நிற்கின்றது. அவரது போராட்ட வலிமையையும் நியாயத்தையும் ஊடகங்கள் உலகெங்கும் கொண்டு சென்றன. அதன் காரணமாக அவரைப் பயங்கரவாதியாகப் பிரகடனம் செய்த நாடுகள் கூட அவரது கருத்துக்களை ஆதரிக்கவேண்டிய நிலை எழுந்தது.
முழு உலகத்துடனும் இணைந்து எமது நாடும் அந்த மாமனிதருக்கு இன்று அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் சட்ட பூர்வமாகவும், சட்ட பூர்வமற்ற வழிமுறைகள் மூலமும் ஊடக ஒடுக்குமுறை தலைவிரித் தாடும் எமது நாட்டில் நாம் அவருக்கு அஞ்சலி செய்யும் தகுதி உள்ளவர்கள் தானா என எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியவர்களாயுள்ளோம்.
இங்கு இந்தச் சபையில் பல உறுப் பினர்கள் பல விடயங்கள் பற்றியும் பேசினார்கள். தொழில் துறைகளில் இருப்பவர்கள், மருத்து வர்கள், ஆசிரியர்கள் போன்ற பல்வேறுதுறைகளில் உள்ளவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள், வசதியீனங்கள் யாவும் எடுத்துக் கூறப்பட்டன. அவைகள் தேவையானவை தான். அதைப்போலவே எமது சமூகத்தில் இருக்கும் இன்னொரு சமூகத்தினரைப் பற்றி நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அவர்கள் தான் இந்த நாட்டிலுள்ள ஊடகவிய லாளர்கள். இவர்கள் பலதரப்பட்ட ஊடகங்களில் பணிபுரிகின்றார்கள்.
ஏனைய தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள் போலவே இவர்களும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணிபுரிகிறார்கள். ஏதோ செய்திகளை எடுத்துப் பிரசுரித்துவிட்டு அல்லது வெளிப் படுத்தி விட்டு அவர்கள் சொகுசாக வாழ்க்கை நடத்துவதாக எவரும் நினைப்பார்களானால் அது மிகவும் தவறான ஒரு விடயம்.
அன்றாட வாழ்வில் அவர்களும் மற்றவர்களைப் போலவே கஷ்டங்களை அனுபவிக் கின்றார்கள். அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. பிள்ளைகள் இருக்கின்றார்கள். குடும்பப் பொறுப்புகள் இருக்கின்றன. வீட்டுப் பிரச்சினை, போக்குவரத்துப் பிரச்சினை என்று நிறையப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள்.
அவர்கள் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், படங்கள் போன்றவற்றுக்காக எத்தனையோ விதமான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். ஆபத்துக்களைச் சந்திக்கின்றார்கள். இரவு பகல் பார்க்காமல் உழைக்கின்றார்கள். சில பல வேளைகளில் சரியான நேரத்தில் சரியாகச் சாப்பிடாமல் ஒரு பணிஸ், ஒருவடையைச் சாப்பிட்டு தேநீர், கோப்பியை அருந்திவிட்டு கடமை புரிகின்றார்கள்.
சில வேளைகளில் அதிகாரிகளின் கோபம், படையினரின் தாக்குதல், சில வேளைகளில் தம் உயிரையும் பணயம் வைக்கிறார்கள் இந்த ஊடகவியலாளர்கள். இவைகளைக் கவனித்து அவர்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று எவரும் சிந்திக்காமல் இருப்பது கவலையளிக்கிறது.
கடந்த வருடம் ஊடகவியலாளர்களுக்கு 12 லட்சம் ரூபாய் கடனாக தருவதாக ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. அது உண்மையில் வரவேற்க வேண்டிய ஒன்று. அதே போன்று ஊடகவியலாளர்களுக்கென்று அரசு திட்டமொன்றை அறிமுகப்படுத்து வது அவசியம் என்று நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
கடந்த காலங்களில் கொழும்பிலுள்ள ஊடகவியலாளர்களுக்கென்று வீடு வழங்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. அதே போன்ற திட்டங்கள் கொழும்பு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமின்றி வெளியூர் ஊடகவியலாளர்களுக்கும் பயன்படும் படியாக நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம்.
மடிக்கணினிகளும் புகைப்படக் கருவிகளும் அவசியம் தான். அதே போல் வீட்டு வசதி, வாகன வசதி, போன்ற விடயங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கு நிதி வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
இன்னொரு விடயம், நாடு முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர்கள் தமது பணிகளில் ஈடுபடும்போது தாக்குதலுக்கு உள்ளாவது, விபத்துகளில் சிக்குவது போன்றவற்றுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
அவ்வாறான சம்பவங்களில் உயிர் இழக்க நேரிடுமானால் அவர்களுக்கு மிக இலகுவாக நிதி வசதிகள் கிடைக்கும் வகையில் காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
நாட்டில் நடப்பவைகள் யாவும் நாளைய தினம் பத்திரிகைகளிலும் ஏனைய ஊட கங்களிலும் வெளிவந்து விடுகின்றன. அதற்காக உழைக்கும், இரவு பகல் பாராது பணியாற்றும் ஊடகவியலாளர் களை நாம் மறந்துவிடகூடாது என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.
எமது நாட்டில் துணிச்சலுடனும் நேர்மையுடனும் உண்மைகளை வெளியிட்ட, நியாயங்களுக்கெதிராகக் குரல் கொடுத்த எத்தனையோ ஊடகவியலாளர்கள் நட்ட நடுவீதியில் பலர் பார்க்கப் படுகொலை செய்யப்பட்டனர்.
பலர் காணாமற்போய் விட்டனர். பலரின் வீடுகள் தாக்கப்பட்டன. பலருக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப் பட்டன. பலர் சிறை செய்யப்பட்டனர். பலர் உயிர்ப் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இப்படியான நிலையில் ஊடகவியலாளர் கள் மீதான வன்முறைகள் தொடர்பாக எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
எம்.ரி.வி., லங்கா ஈ நியுஸ், உதயன் போன்ற ஊடக நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றுக்குப் பொருள் சேதங்களும் பணியாளர்களுக்கு உயிர்ச் சேதமும் விளைவிக்கப்பட்டன.
ஆனால் இன்று வரை இப்படியான வன்முறைகள் தொடர்பாக நீதி கிடைக்கவில்லை. இந்நிறுவனங்களுக்கு எவ்வித நட்டஈடுகளும் வழங்கப்படவில்லை. ஆனால் ஊடகங்களின் குரலை ஒடுக்க ஊடக ஒழுக்கக் கோவை யயான்றை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்படியான ஒரு சூழ்நிலையில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் நடத் தப்படும் சட்டவிரோத வன்முறைகளின் பின்னால் அதிகாரம் படைத்த அரசசார்பு சக்திகள் உண்டு என நாம் சந்தேகப்படுவதை எவராவது தவறு என்று சொல்லிவிட முடியுமா?
வடக்கில் பிரபல ஊடகவியலாளராக விளங்கிய நிமலராஜன் அவரது வீட்டில் வைத்து அவரது குடும்பத்தினர் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். பின்பு அவர்கள் சட்டமா அதிபரின் சம்மதத்துடன் பிணையில் விடப்பட்டனர்.
இவ் வழக்கில் பிரதான எதிரியான ஈ.பி.டி.பி உறுப்பினர் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இன்றுவரை அவர் கைது செய்யப்படவோ அல்லது அவரைக் கைது செய்ய இன்டர்போல் அமைப்பைக் கோரவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும் இன்றுவரை நீதி கிட்ட வில்லை. இதில் அதிகாரம் படைத்தவர் களின் பின்னணி இல்லையனச் சொல்லி விடமுடியுமா?
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக் கிரமதுங்க சர்வதேச அளவில் மதிக்கப்பட்ட ஒரு பிரபல ஊடகவியலாளர். அவர் பட்டப் பகலில் நட்ட நடு வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது படுகொலை தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
ஒருவர் தடுப்புக் காவலில் இருந்தபோதே நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டார். மற்றவர் போதிய ஆதாரங்கள் இல்லை எனச் சட்டமா அதிபரால் தெரிவிக் கப்பட்டதை அடுத்து அவர் விசாரணையின்றியே விடுதலை செய்யப்பட்டார். இவற்றின் பின்னணியில் அதிகாரங்கள் இல்லை என்பதை நம்ப முடியுமா?
லங்கா ஈ.நியூஸ் ஊடகவியலாளரும் கேலிச் சித்திரகாரருமான பிரகீத் எக்னெலிகொட இருவருடங்களுக்கு முன்னர் காணாமற் போய்விட்டார். அது தொடர்பாக ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் வெளிநாடொன்றில் தலைமறைவாக இருப்பதாக இலங்கையின் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இப்பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது உறுப்பினர் ஒருவர் நான் பிரகீத்தை பிரான்சில் சந்தித்தாக கூறியிருந்தார். எனவே, அப்பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. அங்கு சாட்சியமளிக்க குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு பிரகீத்தை நேரடியாகத் தெரியாது எனவும் தனக்கு வேறு ஒருவர் பிறிதொரு வரைக்காட்டி இவர்தான் பிரகீத் என அறிமுகம் செய்ததாகக் கூறினார்.
ஆனால், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட அந்த நபர் அப்படி எதுவும் இடம்பெறவில்லை என பிரான் சிலிருந்து அறிவித்து விட்டார். இப்படியான நிலையில் பிரகீத் உயிருடன் இருப்பதாக ஒரு போலியான தோற்றப்பாடு உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை தெளிவாகப் புலனாகின்றது.
இம்முயற்சியில் இலங்கையின் ஐ.நா. பிரதிநிதி, குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கும் பங்கு உண்டு என நம்பாமல் இருந்துவிட முடியுமா?
அண்மையில் கொழும்பிலுள்ள சண்டே லீடர் பத்திரிகையின் துணை ஆசிரியை மந்தனா இஸ்மாயில் வீட்டிற்குள் நட்டநடுநிசியில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அங்குள்ளவர் களைத் துப்பாக்கி முனையில் வைத்துக் கொண்டு சில ஆவணங்களைத் தேடியுள்ளனர்.
அவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டபோதிலும் அவர்களின் பின்னணியில் நின்றவர்கள் யார் என்ற விடயம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. மந்தனா இஸ்மாயில் உயிர்ப் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இவ்வாறே மெளபீம பெண் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டபின் குற்றச்சாட்டு எதுவுமின்றி விடுவிக்கப்பட்டதும் ஊடகவியலாளர் திசா நாயக்கவுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண் டனை விதிக்கப்பட்டதும், இலங்கை ஊடக வரலாற்றில் மறந்துவிடக்கூடிய விடயங்களல்ல.
இங்கு என்னால் தெரிவிக்கப்பட்டவை ஊடகவியலாளர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட அநீதிகளில் ஒரு சில மட்டுமே. இலங் கையில் வேறு பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என்பதையும், பலவித துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதையும் உயிரச்சம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது.
ஏற்கனவே நான் குறிப்பிட்டமை போன்ற சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதும் அவை தொடர்பாக எவரும் கைது செய்யப்படாமையும் இந்த நாட்டில் ஊடக சுதந்திரத்தைக் கொலை செய்யும் நடவடிக்கைகளாகும்.
இவற்றின் பின்னால் அரசசார்பு அதிகார பீடங்கள் உள்ளன என்பதை இடம்பெறும் ஒவ்வொரு சம்பவங்களும், அவை தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையும் துல்லியமாகத் தெளிவுபடுத்துகின்றன.
இன்று எமது நாட்டில் இடம்பெறும் ஊடக ஒடுக்குமுறைகள் தொடர்பான கேள்விகள் எமது நாட்டின் எல்லைகளுக்கு வெளியே விரிந்துவிட்டன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சர்வதேசம் எம்மைக் குற்றக் கூண்டில் ஏற்றும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை இலங்கையில் நிலவும் ஊடக ஒடுக்குமுறை தொடர்பாக வெளியிட்ட கண்டனத்தை நாம் அலட்சியப்படுத்தி விடமுடியாது.
அது மட்டுமின்றி டேவிட் கமரூன் உதயன் நிறுவனத்துக்கு வருகை தந்தமையும் அங்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டமையும் புறமொதுக்கப்படக் கூடிய விடயங்களல்ல.
எமது அரசும் அரசின் அதிகார பீடங்களும் ஊடக சுதந்திரம் உட்பட ஜனநாயக விழுமியங்களைப் பேணி சர்வதேச நெருக்கடிகளுக்குள் சிக்கும் அபாயத்திலிருந்து மீளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நானும் ஓர் இலங்கையன் என்ற உரிமையுடன் கேட்டுக்கொண்டு எனது உரையை நிறைவு செய்கின்றேன் என்றார்.



0 comments to "ஊடகங்கள் மீதான தாக்குதல் ஊடக சுதந்திரப் படுகொலையே: சபையில் சரவணபவன் எம்.பி. சீற்றம்"