Home » » வடமாகாண மக்களின் ஆணையை அரசு, பணத்தைக் கொண்டு அடக்க முற்பட்டால் அவர்களின் தீர்வு ஆயுதத்தை நோக்கியே நகரும்" சஜித் பிரேமதாஸ

"வடமாகாண சபைக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்காது, அந்த மக்களின் ஆணையை அரசு, பணத்தைக் கொண்டு அடக்க முற்பட்டால் அவர்களின் தீர்வு ஆயுதத்தை நோக்கியே நகரும்" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ நேற்றுச் சபையில் எச்சரிக்கை விடுத்தார்.  

இந்தப் புரட்சிக்கு வடக்கு இளைஞர்களை மீண்டும் தள்ளிவிட வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.   நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற காணி அபிவிருத்தி மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:   போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், தமது ஜனநாயக உரிமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு வடக்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

வடக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமது குரலைப் பதிவுசெய்தனர்.    ஒரு தரப்புக்கு அதிகூடிய மக்கள் ஆணை கிடைத்தது. முதலமைச்சர் தெரிவு செய்யப்பட்டார். அமைச்சரவை அமைக்கப்பட்டது.   தேர்தல் நடத்தப்படுவதால் மட்டும் பயனில்லை.

மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும்.    குறித்த தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம் என்பதற்காக நிதி ஒதுக்கீடுகளைச் செய்யாது விடுவதன்மூலம் எதைச் சாதிக்க முடியும்?

இவ்வாறு பழிவாங்க முயற்சிப்பதன் மூலம் பொது விடயங்களில் வெளிநாடுகள் தலையிடுவதற்கான பாதைகளைத்தான் அகலத் திறந்துவிடுகின்றோம்.    வடக்கு மக்கள் தமது ஆணையை வழங்கி மாகாண சபை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அதற்கான நிதியை அரசு ஒதுக்க வேண்டும். இது தொடர்பில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அமைச்சரவையில் குரல் கொடுக்க வேண்டும். இதுதான் நியாயமானதும் சரியானதுமான செயற்பாடு - என்றார்.

0 comments to "வடமாகாண மக்களின் ஆணையை அரசு, பணத்தைக் கொண்டு அடக்க முற்பட்டால் அவர்களின் தீர்வு ஆயுதத்தை நோக்கியே நகரும்" சஜித் பிரேமதாஸ "

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer