நாங்கள் பெரும்பான்மை இனத்தவரோடு, கட்சியால், மொழியால், கலைகளால் வேறுபட்டவர்கள். இதனால் தான் எமக்கு அதிகாரப்பகிர்வு தேவைப்படுகின்றது. எம்மை நாமே ஆழ்வதற்கான சந்தர்ப்பம் தரப்படவேண்டுமென வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கரவெட்டி வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் சபைத் தலைவர் பொ.வியாகேசுவின் தலைமையில இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
எமது மக்கள் நலன்சார்ந்து பலவற்றை நாம் நாம் அரசிடம் கேட்கின்றோம். ஆனால் நாம் கேட்பவற்றை வழங்கக் கூடாது என்ற மன நிலையில் பெரும்பானமை சமூகம் இருகின்றது.
இந்த எண்ணம் மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் நாம் அரசை நம்பியிருக்கக் கூடாது. எமது தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்.
மத்திய அரசுக்கு அடுத்தபடியாக மாகாணசபையும் அதற்கு அடுத்த நிலையில் பிரதேச சபைகளும் உள்ளன. ஒவ்வொருவரும் அடுத்தவரது எல்லைக்குள் பிரவேசிக்காமல் இருந்தால் தான் சுமுகமான உறவினைக் கட்டியெழுப்பமுடியும்.
நாங்கள் பெரும்பான்மை இனத்தவரோடு, கட்சியால், மொழியால், கலைகளால் வேறுபட்டவர்கள். அதனால் தான் எமக்கு அதிகாரப்பகிர்வு தேவைப்படுகின்றது. எம்மை நாமே ஆழ்வதற்கான சந்தர்ப்பம் தரப்படவேண்டும்.
அரசு தமது கருத்தைப் பலப்படுத்தி எம்மை வலுவிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. அரசு எமக்கு நேசக்கரம் நீட்டுவது போல நீட்டி எம்மை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
அந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், கல்வி அமைச்சர் த.குருகுலராசா, மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, இ.ஆர்னோல்ட், க.பரஞ்சோதி, வே.சிவயோகன், எஸ்.சுகிர்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சர்வேஸ்வரன், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் ஆனந்தராஜ் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் சிறுவர்களது இசையணி மற்றும் நாதஸ்வர மங்கல ஒலி வரவேற்புடன் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டுப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியில் பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது.



0 comments to "எம்மை நாமே ஆழ்வதற்கு சந்தர்ப்பம் தரப்படவேண்டும் : முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்"